புனிதரின் பாதை

இதயத்தில் சுரந்த தேன்சுவைப் பாக்களால் இறைவனைப்

புகழ்ந்த

தேவக்குயில் தூய செசிலி

 

தூய செசிலியா இத்தாலி நாட்டின் உரோமை
நகரில் கி.பி.2 ஆம் நூற்றாண்டில் மிகவும் செல்வச்
செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். தினமும்
திருப்பலியில் கலந்து கொள்ளும் பொழுது,
ஆண்டவரைத் தம் உள்ளத்தில் இருத்தி தியானித்து
இறைபுகழ் பாடுவார்; இசைக்கருவிகளை
ஆர்வத்தோடு இசைத்து இசையின் வாயிலாக
இறைவனைப் போற்றிப் புகழ்வார்; எப்பொழுதும்
கைகளை விரித்து செபம் செய்வார். தனது
உடைக்குக் கீழ் முள் ஒட்டியாணம் ஒன்றை அணிந்து,
தம் புலன்களை அடக்கி இறைவனிடம் கண்ணீர்
விட்டு மன்றாடுவார். எங்கு சென்றாலும்
விவிலியத்தை தம் கரங்களில் ஏந்திச் சென்ற இவர்
கற்பு, கீழ்ப்படிதல், இரக்கச் செயல்கள் ஆகியவற்றை
தமது அணிகலன்களாகக் கொண்டிருந்தார்.

 

குழந்தைப் பருவத்திலிருந்தே தூய,
மாசற்ற வாழ்க்கை வாழ்ந்து, இளம் வயதில் தன்னை
முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணம் செய்ததால்
திருமணம் செய்து கொள்ள இவர் விரும்பவில்லை.
இறையன்பு, அறிவு, அழகு, தூய்மை ஆகியவை
நிரம்பப் பெற்ற தூய செசிலியாவை இவரின்
பெற்றோர் இவருடைய விருப்பம் இல்லாமல்
கிறிஸ்துவை அறியாத வலேரியன் என்பவருக்குத்
திருமணம் செய்து கொடுத்தார்கள். திருமண
விழாவில் இசைக்கருவிகளை இசைத்து, தனது
பாடல் வழியாகத் “தான் இறைவனுக்கு மட்டுமே
சொந்தமானவள்” என்பதை தெளிவுபடுத்தினார்.
திருமணவிழா முடிந்த பின் நற்பண்புகள் நிறைந்த
வலேரியன் அன்போடு செசிலியாவின் அருகில்
வந்தபோது தூய செசிலியா அவரிடம், “நான் சிறு
வயது முதலே என் மணவாளனாகிய ஆண்டவர்
இயேசுவுக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்து
விட்டேன். என்னுடைய புனிதத் தன்மையைப்
பாதுகாக்க ஆண்டவர் ஒரு தூதரை எப்போதும்
என்னுடன் வைத்துள்ளார். இதெல்லாம் திருமுழுக்குப்
பெற்றோரின் கண்களுக்கு மட்டுமே தெரியும்; வேறு
எவரது கண்களுக்கும் தெரியாது” என்றார். இதைக்
கேட்ட வலேரியன் உடனே திருத்தந்தை அர்பனிடம்
சென்று திருமுழுக்குப் பெற்றார். அவர் வீட்டிற்குத்
திரும்பி வந்தபோது, தூய செசிலியா தன்னுடைய
அறையில் ஜெபித்துக் கொண்டிருப்பதையும், அவர்
அருகில் ஓர் அழகிய வானதூதர் நிற்பதையும்
கண்டார். அவ்வானதூதர் தனது கரங்களில்
வைத்திருந்த ரோஜா மற்றும் லீலி மாலைகளை
அவர்கள் இருவருக்கும் அணிவித்து, "இவை வாடா

மாலைகள்; இவற்றை பிறர் காண இயலாது. நீங்கள்
புனித வாழ்வு வாழ இது உங்களை அறிவுறுத்தும்"
என மொழிந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும்
நல்ல நண்பர்களாய் ஒன்றாய்க் கூடி, ஆண்டவரைப்
புகழ்ந்து பாடி ஜெபித்து வந்தனர். ஒருநாள்
அவர்களைப் பார்க்க வலேரியனின் தம்பி திபூர்சியுசு
வந்தார். அப்போது வீட்டில் இருவரும்
ஜெபிப்பதையும், அங்கு பூக்களோ அல்லது
பூச்செடிகளோ இல்லாமல் பூக்களின் நறுமணம்
வீசுவதையும் கண்டு வியந்து நின்றார். அவர்கள்
திபூர்சியுசுவிடம், “நீயும் திருமுழுக்குப் பெற்று
கத்தோலிக்க விசுவாசத்தைக் கடைபிடித்தால்
எங்களோடு இருக்கும் ஆண்டவரையும், அவரின்
தூதரையும் காணலாம்” என்றனர். அவரும் உடனே
புறப்பட்டுத் திருத்தந்தையிடம் சென்று, திருமுழுக்குப்
பெற்று கத்தோலிக்க விசுவாச வாழ்வில் இணைந்தார்.
கிறிஸ்தவர்கள் என்ற ஒரே
காரணத்திற்காக கைது செய்யப்பட்டு இறந்த
விசுவாசிகளின் உடல்களை வலேரியன்,
திபூர்சியுஸ், தூய செசிலியா ஆகிய மூவரும் சேர்ந்து
நல்லடக்கம் செய்து வந்ததோடு, மறைசாட்சிகளின்
வீர தியாகத்தை அனைத்து மக்களுக்கும்
எடுத்துரைக்கவும் செய்தார்கள். இவர்களின்
இச்செயல்களைக் கண்டு ஆத்திரமடைந்த உரோமை
ஆளுநன் அல்மாக்கியஸ் மூவரையும் சிறைப்படுத்தக்
கட்டளையிட்டான். ஆளுநன் வலேரியன் மற்றும்
திபூர்சியுசுவிடம், “உங்கள் ஆண்டவரை மறுதலித்து
விடுங்கள்; இப்போதே உங்களை உயிருடன் விட்டு
விடுகிறேன்” என்றான். ஆனால் அவர்கள் இருவரும்
“நாங்கள் கண்டது உயிருள்ள ஆண்டவர். அவரே உலகின் இறைமகன். அவரை ஒருபோதும் மறுதலிக்க
மாட்டோம்” என்றனர். உடனே ஆளுநன் அவர்கள்
இருவரையும் கழுத்தை வெட்டிக் கொல்ல ஆணைப்
பிறப்பித்தான். இருவரும் கழுத்து வெட்டுண்டு
வேதசாட்சிகளாக இறந்தனர்.
தூய செசிலியா இருவரின் உடல்களையும்
துணிவுடன் நல்லடக்கம் செய்துவிட்டு திரும்பும்போது
அவரும் கைது செய்யப்பட்டு தனது விசுவாசத்தை
மறுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டார். அப்போது தூய
செசிலியா, “நான் இயேசுவின் மணவாட்டி என்பதை நீ
தெரிந்து கொள்” என்று துணிவுடன் கூறினார்.
இதைக்கேட்ட ஆளுநன் கோபங்கொண்டு அவரை
மூச்சு முட்டிச் சாகச்செய்ய தீர்ப்பு வழங்கினான். ஓர்
அறையில் அவரை வைத்து பூட்டி, மிக அதிகமாக
நெருப்பு வைத்தனர். அங்கு சூழும் கடுமையான புகை
மூட்டத்தில் புதைந்துப் போவாள் என்று அவர்கள்
கனவு கண்டார்கள். மறுநாள் அறையின் கதவைத்
திறந்து பார்த்தபோது சிறிதும் காயமின்றி தூய
செசிலியா சிரித்த முகத்தினராய் இருந்தார். இதைக்
கேள்விப்பட்ட ஆளுநன் இவருடைய தலையை
வெட்டிக் கொல்ல கொலைகாரனை அனுப்பினான்.
அந்த கொலைகாரனோ இவருடைய கழுத்தை தான்
கொண்டுவந்த கூரிய வாளால் மூன்றுமுறை
வெட்டிய போதும் தலை துண்டாகவில்லை.
தலையைத் துண்டிப்பதற்கு மூன்று முறைக்கு மேல்
வெட்டக் கூடாது என்ற சட்டம் இருந்ததால்
கொலைகாரன் தூய சிசிலியாவின் கழுத்தை பாதி
வெட்டுப்பட்ட நிலையில் விட்டுவிட்டுச் சென்றான்.
இரத்த வெள்ளத்தில் மிதந்த தூய சிசிலியா அந்த
கொடூர வேதனையுடன் மூன்று நாட்கள் உயிருடன்

இருந்தார். அப்போதும் இறை வார்த்தையைப்
போதித்து, பாடல் பாடி சுமார் 400 பேரை
மனமாற்றினார். தன்னிடம் இருந்த அனைத்தையும்
ஏழைகளுக்குக் கொடுத்தார். “தன்வீடு ஒரு ஜெப
ஆலயமாக மாறவேண்டும்” என்ற கடைசி
வார்த்தைகளைக் கூறி, கடவுளுக்கு புகழ் பாடல்
பாடிக் கொண்டே இறைபதம் சென்றார்.
நற்பண்பிலும், தூய்மையிலும் சிறந்து விளங்கி, இறைவனை
மட்டுமே மாட்சிப் படுத்துவதை இலட்சியமாகக் கொண்ட
திருஇசையின் பாதுகாவலியான தூய செசிலியாவின் விழாவைக்
கொண்டாடும் நாமும் இறைவனை எப்போதும் மனதார புகழ்ந்து
பாடுவோம். தன்னுடைய மறைசாட்சிய வாழ்வாலும், இனிமைமிகு
பாக்களாலும் இறைவனுக்கு மகிமையும் புகழும் செலுத்திய தூய
செசிலியாவைப் பின்பற்றி நாமும் இறையாட்சியை இம்மண்ணில்

நிலைக்கச் செய்வோம்.
தூய செசிலியாவின் திருவிழாவானது
நவம்பர் திங்கள் 22 ஆம் நாள்
திருச்சபையால் கொண்டாடப் படுகிறது.

இந்நாளில்

சொற்களைச் செதுக்கி பாவடிக்கும் பாவலர்க்கும்,
பாக்களுக்குப் பண்சேர்த்து பொலிவாக்கும் இசைஞானியர்க்கும்,

சுருதியின்பம் பிசகாமல்
பாட்டிசைக்கும் பாடகர்க்கும்,
பாக்கள்மீது நேசம் கொண்ட நேயர்களுக்கும்

இதயத்தின் ஆழத்திலிருந்து
இனிய நல்வாழ்த்துகள்!