Sunday Thought

கிறிஸ்து அரசர் பெருவிழா

முதல் வாசகம் – 2 சாமுவேல் 5: 1-3
இரண்டாம் வாசகம் – கொலோசையர் 1: 12-20
நற்செய்தி வாசகம் – லூக்கா 23: 35-43

 

இறை சிந்தனை

இறை இயேசுவில் என் அன்பானவர்களே !

இயேசுவின் இனிய நாமத்தில் வணக்கம்.

கிறிஸ்து அகில உலகின் அரசர். அனைத்தும் அவருக்கு
கட்டுப்பட்டதே. அவர் நம்மோடு இருப்பதால் தீமை எதுவும் நம்மை
அணுகாது. அவரின் துணையோடு தடைகளைத் தாண்டி வாழ்வில்
வெற்றியடைய இந்த நாள் நமக்கு அறைகூவல் விடுக்கிறது.
“மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட
ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர்.
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு
கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே
நுழையட்டும். மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின்
ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்”- (திருப்பாடல் 24 : 8 –10)

என்று வர இருந்த மெசியாவை மன்னர் என அழைத்து தாவீது
பாடினார்.
“மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி.
இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்;
வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக்
குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்”- (செக்கரியா 9 : 9)
என இறைவாக்கினர் செக்கரியா மெசியாவின் வருங்கால
ஆட்சிபற்றி எடுத்துக் கூறி மக்களை நம்பிக்கையோடு வாழ
அழைப்புக் கொடுத்தார். மன்னர் என்றால் இயேசு மட்டுமே. அவரே
நிரந்தரமான பேரரசர். உலகமே அவர்முன் மண்டியிடும் என புனித
பவுல் குறிப்பிடுகிறார்-(பிலிப்பியர் 2: 11). இவற்றையெல்லாம்
தாண்டி நமது அன்பான ஆண்டவரே, “விண்ணுலகிலும்
மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு
அருளப்பட்டிருக்கிறது”-(மத்தேயு 28: 18) என்று கூறுவதன் மூலம்
அவரே அனைத்து உலகின் அதிபதி என்பதை உறுதிப்படுத்துகிறார்.
ஆகவே கிறிஸ்து அரசர் பெருவிழாவாகிய இன்று “கிறிஸ்து ராஜா
என்னை ஆளும் நேசா” என்றுப் பாடிக் கொண்டாடுவோம். அவரின்
வல்லமையான வழிநடத்துதலுக்கு நம்மையே ஒப்புக்கொடுப்போம்.
அனைத்து அதிகாரமும் கொண்ட ஒப்பற்ற நாயகன் அவர். அவரை
நினைத்தாலே எல்லாம் நலமாகும். அவரின் பெயரைச் சொன்னாலே
துன்பங்கள் தூரப்போகும்.
வழக்கம் போல அன்றும் பிற்பகல் 3 மணிக்கு பேதுருவும்
யோவானும் இறைவேண்டல் செய்வதற்காகக் கோவிலுக்குச்
சென்றனர். பிறவியிலேயே கால் ஊனமுற்ற ஒருவன் அங்கே
பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். இறைவேண்டலில்
ஈடுபடுவதற்காக ஆலயத்திற்குள் நுழைய இருந்த பேதுரு, யோவான்
ஆகியோரைப் பார்த்து அவன் பிச்சைக் கேட்டான். பேதுரு
அவரிடம், "வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம்
உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு
கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்" என்று கூறி, அவரது
வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது

காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து
நடக்கத்; தொடங்கினார். (திருத்தூதர் பணிகள் 3: 6–8) “மனிதரால்
இது இயலாது. ஆனால், கடவுளால் எல்லாம் இயலும்” – (மத்தேயு
19 : 26). கடினமானது இலகுவாகும்; முடியாது என்பது
சாத்தியமாகும்; முடிந்ததென்று எதுவுமில்லை; புதியது புலரும்
இயேசுவின் உறவில். ஏனென்றால் அவரால் எல்லாம் கூடும்.
அனைத்துமே அவருக்குக் கட்டுப்பட்டுள்ளன. அவரே காண்பவை,
காணாதவை, யுகங்கள், காலங்கள் ஆகிய அனைத்திற்கும் அதிபதி.
அவரே அனைத்தையும் படைத்தவர். அவரே தேவாதி தேவன்.
ராஜாதி ராஜன்.
சில மனிதர்களின் உறவுகள் நமக்குத் துணிவைத் தருகின்றன.
சிலரது வார்த்தைகள் நம்மில் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
அவர்கள் நம்மைக் கைவிடும் போது நமது நம்பிக்கைகள் தகர்ந்து
விடுகின்றன. ஆனால் அவர்களும் மனிதர்கள் தான். அவர்களால்
அனைத்தையும் சாதிக்க இயலாது இதனை ஆய்ந்து பார்க்காமல்
நாம் தளர்ந்து விடுகின்றோம். ஆனால் தேவாதி தேவன் ராஜாதி
ராஜன் சர்வ வல்லமைப் பொருந்தியவர் நம்மோடு இருக்கிறார்.
நமக்குத் துணையாக இருக்கிறார்.
ஒருநாள் இயேசுவும் அவரது சீடர்களும் படகில் பயணம்
செய்து கொண்டிருந்தார்கள். இயேசு படகின் பிற்பகுதியில்
தலையணை வைத்து சுகமாகத் தூங்கி கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல்
தொடர்ந்து மோதியதால் படகில் தண்ணீர் புகுந்தது. போதகரே
சாகப்போகிறோமே என்று அலறியவாறு சீடர்கள் இயேசுவை
எழுப்பினார்கள். இயேசு எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து
கொண்டார். “இரையாதே, அமைதியாயிரு” என்று ஆணையிட்டார்.
காற்று அடங்கியது. இதுவரை இயற்கையின் முன் பலவீனமாகவே
மனிதன் இருந்து வருகிறான். இயற்கை சீறி எழுந்த போதெல்லாம்
மனிதர்கள் கொத்துக் கொத்தாக மரித்தார்கள் என்பதே வரலாறு.
ஆனால் இயேசு மட்டுமே இயற்கையை வார்த்தையால் அடிபணியச்
செய்தவர். எனவே தான் அவர் “மண்ணுலகிலும் விண்ணுலகிலும்

அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது” என்று
கூறுகிறார். நமது தேவைகள் எதுவாக இருந்தாலும் அவரிடம் மனம்
திறந்து பேசுவோம். இவ்வுலகின் கடைநிலை அதிகாரிகளாக
இருந்தாலும் அவர்களிடம் மனுக்கொடுக்க வேண்டுமென்றால்
அவர்களுக்காக நாம் காத்திருக்க வேண்டும். ஆனால் நமது அன்பின்
ஆண்டவரே நமக்காகக் காத்திருக்கிறார். அவரோடு மனம் திறந்துப்
பேசுவோம். நமக்குத் துணையாக அவர் இருப்பார். நம்
வலிமையாகவும், கோட்டை அரணாகவும் அவர் இருப்பார். நம்
பிரச்சனைகளை மாற்றுவார். “அஞ்சாதே, கலங்காதே” என்று
நம்மைத் தேற்றித் திடப்படுத்துவார். நம் வாழ்வில் அமைதியை
ஏற்படுத்துவார். ஏனெனில் “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை”-
(லூக்கா 1 : 37).